பழைய ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக அரசின் கீழ் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று ஆரம்பித்துள்ளது. அவர்கள் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழக அரசு ஆசியிர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ –ஜியோ அமைப்பு இன்று முதல் நடத்தவிருக்கிற காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகள் மிகத் தார்மீகமானது. அதற்குச் செவிசாய்த்து அதனை நிறைவேற்றித் தந்து சிக்கலைச் சுமூகமாகத் தீர்க்க வேண்டிய தமிழக அரசு அதனைச் செய்ய மறுத்து அலட்சியம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜாக்டோ – ஜியோ அமைப்பு இதே கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே பலமுறை போராடியும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வராததன் விளைவாகவே தற்போது மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் உந்தித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கக் கட்டமைப்பின் தூண்களாக, அரசின் ஆணிவேர்களாக இருக்கிற அரசு ஊழியர்களையே தங்களது உரிமைக்காகவும், ஊதியத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிற நிலைக்குத் தள்ளியிருக்கும் அரசின் செயல் வெட்கக்கேடானது” என்று பதிவிட்டுள்ளார்.