This Article is From Apr 18, 2020

“விவசாயத்தைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள்…”- சீமானின் முக்கிய கோரிக்கை

"இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மோசமான சூழலை நாடு எதிர்கொள்ள நேரிடும்"

Advertisement
தமிழ்நாடு Written by

"கொரோனா நோய்த்தொற்று அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால்..."

Highlights

  • மே 3 வரை இந்தியளவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • ஏப்ரல் 30 வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது
  • கோரிக்கைகளை பட்டியலாக வெளியிட்டுள்ளார் சீமான்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு, ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்குக் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மேலும் சில நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். 

இது குறித்து சீமான், “நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். மற்ற தொழில்களைப் போல் அல்லாது விவசாயத்தில் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், உற்பத்தியாகின்ற பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என அனைத்து நிலைகளிலும் வேளாண் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதல் கட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே விவசாயிகள் மீள்வதற்கு முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயிகளுக்கு எவ்வித மீட்புதவி அறிவிப்புகளும் வெளியிடாமல் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக விவசாயத் தொழிலே முற்றாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மோசமான சூழலை நாடு எதிர்கொள்ள நேரிடும். மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால் விவசாய உற்பத்தி முடங்கியிருப்பது என்பது கடுமையான உணவுப் பஞ்சத்திற்கும், பட்டினி சாவிற்கும் வழிவகுத்துவிடும்.

Advertisement

• இதனைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள், விவசாயப் பணிகள் செய்வதற்கும் , விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உள்ள நிபந்தனைகளை மேலும் தளர்த்த வேண்டும். விவசாயிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

• போதுமான அளவு விவசாய எந்திரங்கள், விவசாயக் கூலியாட்கள், உரங்கள் உள்ளிட்ட விவசாயம் தடைப்படாமல் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு எடுக்க வேண்டும்.

Advertisement

• நெல், மலர் கொள்முதல் நிலையங்கள், காய்கறி, பழங்களுக்கான சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் அவை இருக்குமிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் அரசே ஏற்படுத்தித் தரவேண்டும்.

• பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடமளிக்காமல் இரண்டு ஆண்டிற்கு விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும்.

Advertisement

• தற்போதைய சூழ்நிலையில் உற்பத்தி செலவையே மீளப்பெற முடியாத நிலை உள்ளதால் சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்.

• விவசாயிகளுக்கு விதிக்கப்படும் விற்பனை வரியை ஓராண்டிற்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

Advertisement

• உயர்நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நட்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவியும், விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கடனுதவியும் அளிக்க வேண்டும்.

• மாவட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்கவும்,
• அவற்றை விற்பனை செய்யவும், பாதிப்பிலிருந்து மீண்டு விவசாயத்தை மீண்டும் தொடங்கிட தேவையான ஆலோசனைகளையும், வாய்ப்புகளையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.

Advertisement

எனவே மத்திய மாநில அரசுகள், இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு உடனடியாக விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என அறிக்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 
 

Advertisement