இதை ஸ்டாலினோ, எடப்பாடி பழனிசாமியோ செய்வார்களா..? - Seeman
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர்த்து, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
இதையொட்டி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman). மேடையில் உரையாற்றிய சீமான், “ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy), 1000 ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு வந்தால், அரசே செலவை ஏற்கும் என்று சொல்கிறார். நான் சொல்கிறேன்… உங்கள் மகனாக, ஒரு பைசா செலவில்லாமல் இலவச மருத்துவம், உலகத் தரத்தில் என் தலைமையிலான அரசு செய்யும். சரியான மருத்துவம், சமமான மருத்துவம், ஏழைப் பணக்காரன் பாகுபாடு இல்லாமல் கொடுக்கப்படும். இதை ஸ்டாலினோ, எடப்பாடி பழனிசாமியோ செய்வார்களா..?
அப்படித்தான் நான் காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை கொடு என்று சொல்லி வருகிறேன். ஜெகன் மோகன் ரெட்டி அதை செயல்படுத்திவிட்டார். என்னுடைய புத்தகம் அவர் கையில் இருக்கும் போலிருக்கிறது. பணியில் இருக்கும்போது ஒரு காவலர், எதற்கு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சாகிறார். அவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்கள். அதனால்தான். தமிழகத்தில் இருக்கும் எல்லோருக்கும் விடுமுறை இருக்கிறது. ஆனால், காவலர்களுக்கு மட்டும் விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது தீபாவளி வந்தால், எல்லோரும் சொந்த ஊருக்குப் போவீர்கள். காவலர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். அப்போதும் பணி செய்து கொண்டே இருப்பார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் வாரம் ஒரு முறை காவலர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும்” என்று ஆவசேமாக பேசினார்.
முன்னதாக சீமான், நாங்குநேரியில் பிரசாரத்தில், ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். மேலும், அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை குறித்தும் பேசினார். “ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிழர்களா..? இல்லை, அவர்கள் தமிங்கிழர்கள்… டங்கிலிஷ்காரர்கள்… பனை மரத்திலிருந்து பச்சை மட்டை எடுத்து வந்து, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவோரை சட்டையைக் கழற்றி அடிக்க வேண்டும். தோலுரிந்த இடத்தில் உப்பைத் தடவிவிட்டு அப்படியே வேடிக்கைப் பார்க்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.