Seeman news - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் சீமான்
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறார். இப்படி அவர் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
சீமான் மேடையில் உரையாற்றுகையில், “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். சரிதான் போடா. ஒரு காலம் வரும். வரலாறு திரும்ப எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம், அமைதிப் படை என்கிற அணியாயப் படையை அனுப்பி என் இன மக்கள் கொன்று குவித்த, என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு எழுதப்படும்.
ஓட்டுக்காக நான் மூடி மறைத்தெல்லாம் பேசும் ஆள் கிடையாது. போட்டா போடு போடாவிட்டால் போ. எனக்கு ஒரு இழப்பும் கிடையாது. என்னை விட்டால் உனக்கு யாரும் கிடையாது என்பதை புரிந்துகொள்” என்று விசில் மற்றும் கைத்தட்டல்களுக்கு நடுவில் பேசினார்.
சீமானின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருக்கும் சீமான் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது.