Seeman about Delhi Violence: "இந்தியாவில் உச்சபட்ச பாசிசம் தலைவிரித்தாடுகிறது"
ஹைலைட்ஸ்
- டெல்லியில் சிஏஏ ஆதரவு - எதிர்ப்பாளர்களுக்கு இடையில் மோதல்
- வன்முறை வெடித்ததில் 20 பேர் பலி
- வன்முறையால் 150-க்கும் மேற்பட்டோருக்குக் காயம்
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான், அது குறித்து கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த இந்த வன்முறையில் பல்வேறு கட்டடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், டெல்லி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, உள்துறை அமைச்சகம் நிலவரம் கட்டுபாட்டுக்குள் உள்ளதாக தெரிவித்த மறுநாளே மீண்டும் வன்முறை சம்பங்கள் நிகழ்ந்தன. இத்தனைக்கும், சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தும் இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3வது முறையா வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வந்த நேரத்தில் இந்த கலவரம் நடந்திருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, “அது குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதிக்கவில்லை. ஆனால், இந்தப் போராட்டங்களை அணுகுவது குறித்து இந்தியாதான் முடிவெடுக்க வேண்டும்,“ என்று கூறினார்.
இந்நிலையில் NDTV-யின் ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோவைப்பகிர்ந்துள்ள சீமான், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், “திட்டமிட்டு வன்முறைக்களமாக மாற்றப்பட்டு இசுலாமிய மக்களும், மசூதிகளும், தம்பி அரவிந்த் குணசேகர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருப்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்..? இந்தியாவில் உச்சபட்ச பாசிசம் தலைவிரித்தாடுகிறது!” என்று கொதிப்புடன் ட்வீட்டியுள்ளார்.