Seeman on Sujith's Rescue - "எல்லாவற்றையும் செய்த அரசு, இந்த விஷயத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும்“
Seeman on Sujith's Rescue - ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் (Sujith) 80 மணி நேர போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிறுவன் மரணத்தில் இருக்கும் ஒரு முக்கிய சந்தேகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், நிருபர் ஒருவர், “சுஜித் மரணம் தொடர்பாக எல்லாவற்றையும் காட்டிய தமிழக அரசு, சிறுவனின் உடல் மீட்கப்பட்டதைப் பற்றி தெளிவான விளக்கம் அளிக்காததோ, அதைக் காட்டாததோ ஏன்?,” என்றார். அதற்கு சீமான், “சுஜித்தின் உடல் பத்திரமாகத்தான் மீட்கப்பட்டதா என்கிற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. அது குறித்த சில கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறேன். ஊடகங்கள், சுஜித் முதலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து, இறுதிவரை அனைத்தையும் நேரலையில் காட்டின. ஆனால், சிறுவன் உடல் மீட்கப்பட்டதை மட்டும் காட்டவில்லை. அல்லது, காட்ட அனுமதிக்கப்படவில்லை. எல்லாவற்றையும் செய்த அரசு, இந்த விஷயத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும்,“ என்றார்.
தொடர்ந்து அவர், “சுஜித்தின் மரணம் என்பது மிகவும் வேதனையளிக்கக் கூடிய ஒரு விஷயம். இனி இது மாதிரி விஷயம் நடந்துவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையை இது தந்திருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முனைப்புடன் இருக்க வேண்டும்,” என்று கூறினார்.
திருச்சி (Trichy), மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் (Nadukkapatti), கடந்த வெள்ளிக் கிழமை, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க சுமார் 80 மணி நேரம் போராட்டம் நடந்தது. இறுதியில் சுஜித்தை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது.