This Article is From Aug 11, 2020

2021 தேர்தலில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்?- செல்லூர் ராஜூ கொடுத்த ட்விஸ்ட்

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...

2021 தேர்தலில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்?- செல்லூர் ராஜூ கொடுத்த ட்விஸ்ட்

செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது
  • செல்லூர் ராஜூ, எடப்பாடியார் பெயரை முன்மொழியவில்லை
  • அதிமுகவில் செல்லூர் ராஜூவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. 

அதிமுக சார்பில், தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார். அவர் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அல்லது, முன்னாள் முதல்வரும் இன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. 

அதிமுகவிலும், முக்கிய நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் எடப்பாடிக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இப்படியான சூழலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள்.

அதேபோலத்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். இதுதான் அதிமுகவின் வரலாறு.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” என்று சூசகமான பதிலை தெரிவித்துள்ளார். 

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

.