செல்லூர் ராஜூ உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்
கலிஃபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே, வைகை அணையில் தெர்மாகோல் போடும் திட்டத்தை செயல்படுத்தியதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ, இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வைகை அணையில் நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க ஒரு புதுமையான திட்டத்தை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அது என்னவென்றால், மிதக்கும் தெர்மாகோல் திட்டம். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி சில விநாடிகளிலே காற்றில் தெர்மாகோல்கள் அனைத்தும் பறந்து விட்டது. இதனால், அவர் சமூகவலைதளங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே வைகை அணையில் தெர்மாகோல் போடப்பட்டது. அதற்கு தெர்மாகோல் போட்டால் சரியாகுமா என்று கேட்டால், நிச்சயம் சரியாகும்.
இந்த திட்டம் கலிஃபோர்னியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு பெரும் பொருளாதார செலவில் பிளாஸ்டிக் பந்துகள் மூலமாக இதனை செய்துள்ளனர். அதேபோல், இங்கு தெர்மாகோல் மூலமாக மிக குறைவான செலவில் நிறைவேற்றலாம் என்று கூறினார்கள். இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகத்திடம் கேட்டபோது, தெர்மாகோல் திட்டம் ராஜஸ்தானில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்தே, சரி இங்கும் அதேபோல் நடைமுறை படுத்தலாம் என்று முயற்சித்த போது பொறியாளர் செய்த தவறால், தெர்மாகோலை ஒன்று படுத்தாமல், டேப் பயன்படுத்தி ஒட்டி வைத்து விட்டார். அது அடித்த காற்றில் பறந்துவிட்டது. அதனால், செல்லூர் ராஜூ உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார் என்று அவர் தன்னை தானே கிண்டல் அடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டார்.