This Article is From Jul 19, 2018

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு…சிவசேனாவின் நிலைப்பாடு என்ன?

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு…சிவசேனாவின் நிலைப்பாடு என்ன?

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், பாஜக-வின் வெகு நாள் கூட்டாளியான சிவசேனா, நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் பக்கம் நிற்கும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. 

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்கட்சிகளுடன் சிவசேனா கை கோக்குமா அல்லது பாஜக-வுக்கு தோல் கொடுக்குமா என்பதில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது. 

இந்த விஷயம் குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ஆனந்த் குமார், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, எதிர்கட்சிகள் கொண்டு வரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக எங்கள் தோழமை கட்சிகள் அனைத்தும் வாக்களிக்கும்’ என்று தகவல் தெரிவித்தார். 

ஆனால், சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் கடந்த சில காலங்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றவுடன் இந்த விரிசல் இன்னும் அதிகரித்தது. இதையடுத்து தான், சமீபத்தில் மும்பையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மீண்டும் சிவசேனா - பாஜக கூட்டணி அமைத்தது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ‘வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும்’ என்றும் அறிவித்துள்ளார். இதனால், வெள்ளிக் கிழமையன்று நடக்கவுகள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் முடிவு மிகுந்த கவனம் பெறும் என்று கூறுப்படுகிறது. ஆனால், பாஜக-வுக்கு எதிராக சிவசேனா வாக்கும் அளிக்கும் அளவுக்கு பிரச்னை முற்றிவிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 
 

.