'மகனின் விடுதலை விவகாரத்தில் அரசியல் குறுக்கிடுவதாகவும், அரசியல் செய்பவர்கள் சொந்தங்களையும், பிள்ளைகளையும் சிறையில் வைத்து விட்டு அரசியல் செய்ய வேண்டும்" என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேதனை மல்க தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமை தாங்கியுள்ளார்.
போராட்டத்தின்போது அற்புதம் அம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி-
எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசை அணுகினேன். அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு தரப்பினருக்கு கோப்புகளை அனுப்பியுள்ளதாகவும், இதனை ஒட்டுமொத்தமாக மறுப்பதற்கு வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை ஏதும் நடக்கவில்லை. 3 மாதங்களாக கவர்னர் அமைதியாக இருக்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சரியாக பயன்படுத்தி என் மகனை விடுதலை செய்திருப்பார் என்று அதிமுகவினர் என்னிடம் தெரிவித்தனர்.
28 ஆண்டுகளாக ஏழுபேரும் தண்டனை அனுபவித்துள்ளனர். மக்களை குழப்புவதற்காக வழக்கு ஆரம்பித்த இடத்திற்கு சிலர் செல்கின்றனர். அந்த நிலையை யாரும் எடுக்கக் கூடாது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்போது அதில் அரசியல் குறுக்கீடு செய்கிறது. எதற்காக அரசியல் செய்கிறீர்கள்? யாரை வைத்து அரசியல் செய்கிறீர்கள்?. உங்கள் சொந்தங்கள், பிள்ளைகளை சிறையில் வைத்து விட்டு அரசியல் செய்யுங்கள்.
மாநில அரசுக்கு விதி 161-ன்படி முழு உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். கையெழுத்து போடுவது கவர்னரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.