This Article is From Dec 15, 2018

''செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை'' - செல்லூர் ராஜு விளாசல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை தொடர்ந்து அவரை அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

''செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை'' - செல்லூர் ராஜு விளாசல்

செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை என்றும், திமுக வலிமையான எதிர்க்கட்சி இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்துள்ளார். இதையடுத்து, தினகரனின் கூடாரம் காலியாகி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், செந்தில் பாலாஜி கட்சியில் இணைவதை விழா எடுக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை இருப்பதாக கிண்டல் செய்தார். இந்தநிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு இந்த விவகாரம் குறித்து மதுரையில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-
அதிமுகவில் செந்தில் பாலாஜி சேரும்போது கவுன்சிலராகத்தான் இருந்தார். அவரை அமைச்சராக்கி அதிமுக அழகு பார்த்தது. இப்போது முன்னாள் அமைச்சர் என்ற பெயருடன் திமுகவில் அவர் சேர்ந்திருக்கிறார். அதிமுக கட்சி அவருக்கு உயர்வு அளித்திருக்கிறது.

இந்த இயக்கத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டவர்கள் கட்சியில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். அந்த வகையில்தான் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததை பார்க்கிறோம். செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி கிடையாது. எதிர்க்கட்சியான திமுகவும் வலிமையாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
 

.