சென்ற அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
அதிமுக-வுக்கு ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோதே, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டு, கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து சசிகலா தலைமையிலான அதிமுக அணிக்கு, தனது ஆதரவை தெரிவித்து வந்தார் செந்தில். தொடர்ந்து டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது, அதன் அமைப்புச் செயலாளராக ஆனார். இந்நிலையில், தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதத்தில் சில நாட்களுக்கு முன்னர் திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி நடந்து வரும் புகைப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
வரும் ஞாயிற்றுக் கிழமை, திமுக தலைவராகவும் முன்னாள் தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதியின் முழு உருவச் சிலை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான ‘அண்ணா அறிவாலயத்தில்' திறக்கப்பட உள்ளது. இதனால், திமுக-வினர் தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்து வருகின்றனர். இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு சோனியா காந்தி உட்பட பல்வேறு தேசிய அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திமுக-வில், செந்தில் பாலாஜி இணைந்துள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளன.