This Article is From Dec 14, 2018

‘எடப்பாடியும் திமுக-வில் இணைவார்’- கட்சி தாவிய பின்னர் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி

திமுக-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, பரபரவென கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் காரசாரமாக பதிலளித்தார்

‘எடப்பாடியும் திமுக-வில் இணைவார்’- கட்சி தாவிய பின்னர் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி

திமுக-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, பரபரவென கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் காரசாரமாக பதிலளித்தார்.

கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பித்த செந்தில் பாலாஜி, ‘திமுக-வின் தலைவர் தளபதியை, சிறந்த தலைவராக நான் பார்க்கின்றேன். அம்மா மறைவிற்குப் பிறகு, நான் ஒரு இயக்கத்தில் செயல்பட்டு வந்தேன். அங்கு ஏற்பட்ட சில முரண்கள் காரணமாக விலகினேன். இன்று தளபதியின் முன்னிலையில், திமுக-வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். தொண்டர் அரவணைப்பைப் பெற்றவர் தான் உண்மையான தலைவர். அது தளபதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இன்று திமுக-வில் இணைத்துக் கொண்டுள்ளேன். ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சி, தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. பாஜக-வுக்கு அடிமையாக இருக்கும் இந்த அரசு, நமது உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளது. இந்த ஆட்சியை வீழ்த்தி, தமிழக மக்களின் உரிமைகளை திமுக மீட்டெடுக்கும்' என்றார்.

அவர் தொடர்ந்து, ‘என்னுடன், திமுக-வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இணைவார்கள். இருள் அகற்றி ஒலி தருவது சூரியன். எனது மனதில் இருக்கும் இருளை அகற்றி, ஒலி தந்துள்ளது திமுக. எப்போது தேர்தல் வந்தாலும், ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சியைத் துரத்தியடிக்கும் தளபதி ஸ்டாலின் தலைமையிலான திமுக. தமிழகத்தின் அடுத்த முதல்வராக தளபதியை தமிழக மக்கள் அமர வைப்பார்கள்.

1996 ஆம் ஆண்டு, சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் களம் கண்டேன். அதன் பிறகு அதிமுக-வில் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றினேன். அம்மாவின் தலைமையில் நான் செயல்பட்டேன். தற்போது, தளபதி மேல் உள்ள ஈர்ப்பால் இங்கு வந்துள்ளேன். கரூர் 4 சட்டமன்ற தொகுதியிலும், 1 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். அதற்காக நான் அயராது உழைப்பேன்' என்று முடித்தார்.

தொடர்ந்து, ‘மனதில் இருள் அகன்றுள்ளதாக கூறுகின்றீர்களே, அந்த இருள் டிடிவி தினகரனா..?' என்று கேட்டதற்கு

‘இதற்கு முன்னர் ஒரு தலைமையின் கீழ் நான் செயல்பட்டிருக்கிறேன். அப்போது அதற்கு உண்மையாகத்தான் நான் இருந்தேன். தற்போது நான் அந்த இயக்கத்திலிருந்து விலகி திமுக-வில் சேர்ந்துள்ளேன். இதனால், அங்கு இருப்பவர்கள் ஆதங்கப்பட்டு சில கருத்துகளைச் சொல்லலாம். அது போலவே, டிடிவி தினகரன் என்னைப் பற்றி கூறும் கருத்துக்கு நான் பதில் சொன்னால், அது அரசியலில் பண்பாக இருக்காது. திமுக-வில் இணைந்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

தமிழக மக்களின் உரிமைகளுக்காக தளபதி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். மக்கள், திமுக-வுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால் வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேரத்லில் வெற்றித் தேடித் தருவார்கள். அதில் என் உழைப்பும் ஒரு சிறிய முயற்சியாக இருக்கும்' என்றார்.

இன்னொரு நிருபர், '18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யதது தான், அமமுக-விலிருந்து நீங்கள் விலகியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறதே?'

'நான் உட்பட 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டப் பிறகு, அந்த அணியில் முதன்முறையாக தேர்தலுக்கு செல்லலாம் என்று சொன்னதே நான்தான். நாம் வழக்கு போட்டால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மக்கள் விரோத ஆட்சித் தொடரும். அதனால், அது வேண்டாம் என்று சொன்னவன் நான்' என்று கூறினார் கறாராக.

தொடர்ந்து, ‘அதிமுக பற்றி..?', என்றதற்கு

‘அதிமுக என்கிற இயக்கம், மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் லட்சோப லட்ச மக்கள் பயணிக்கத் தயாராக இல்லை. 2016 தேர்தலில், அம்மா முதல்வராக வேண்டுமென்று தான் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களித்தனர். இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை எடப்பாடி அரசியலில் இருப்பார். அதன் பிறகு விவசாயம் பார்க்கப் போகலாம்' என்று கிண்டலுடன் பதிலளித்தார்.

அதையடுத்து, ‘திமுக-விலிருந்து அழைப்பா, அல்லது நீங்களே வந்தீர்களா..?' என்று கேட்கப்பட்டது,

‘என்னை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கினர் கரூர் மக்கள். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான் திமுக-வில் இணைந்திருக்கிறேன். மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. அதை எதிர்க்க திமுக-வாலும், தளபதியாலும் தான் முடியும். ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸும் திமுக-வில் இணைவார்கள். லட்சக்கணக்கான மாற்று அணியினரும் திமுக-வில் இணைவார்கள்' என்று அதிர்ச்சி பதிலை கூறினார்.

நிறைவாக, ‘திமுக-வை எதிர்த்துவிட்டு, இப்போது இங்கேயே வந்துள்ளீர்களே..?' என்று கேட்டதற்கு,

‘அம்மா மறைவிற்குப் பின்னர், அதிமுக-வில் நிலைமை சரியில்லை. ஓபிஎஸ் முதலமைச்சரான பின்னரும் சரி, ஈபிஎஸ் முதலமைச்சரான பின்னரும் சரி, தமிழக உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. அது ஸ்டெர்லைட் விவகாரம், நீட் என நீண்டது. அப்படிப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் தகுதி தளபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுவே, திமுக-வில் இணையக் காரணம். தமிழகத்தில் இருக்கும் 3 கோடி இளைஞர்கள் தளபதி தான் முதல்வராக வேண்டுமென்று விரும்புகிறார்கள். இது குறித்து ஒரு மாத காலமாக நான் ஆலோசித்துதான் முடிவெடுத்தேன்' என்று கூறிவிட்டு சடசடவென கிளம்பிவிட்டார்.

.