இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, என்.டி.டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இலங்கையில் நடந்திருக்கும் தீவிரவாத தாக்குதலில் 320-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுகுறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததாகவும், தாங்கள் போதிய கவனம் இல்லாமல் இருந்து விட்டதாகவும் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று கொழும்புவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 320 பேர் உயிரிழந்தனர். 500-க்கும்அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உள்ளூரை சேர்ந்த அமைப்பு ஒன்றுதான் இதற்கு காரணம் என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இந்தநிலையில், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே என்.டி.டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
இந்தியா எங்களுக்கு சில உளவுத்துறை தகவல்களை அளித்தது. ஆனால் நாங்கள்தான் சற்று கவனம் இல்லாமல் இருந்து விட்டோம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவுத்துறையுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.
வெளிநாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் உதவி கேட்டுள்ளோம். கடந்த மாதம் நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக இலங்கையில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
தொடர் குண்டுவெடிப்பால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் இருந்து இலங்கை மீண்டு வரும். இதேபோன்று எகிப்து, பாலியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நாடுகள் வெகு விரைவில் பழைய நிலைக்கு திரும்பின. இருந்தாலும் எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலான விஷயம்தான் இஞ்கு நடந்திருக்கிறது. இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதல்களையும், போர்களையும் நாங்கள் பார்த்து விட்டோம்.
இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.