இந்த திடீர் கட்சித் தாவல் மாயாவதிக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Jaipur: மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், சென்ற ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்களாக பதவியேற்றனர். அந்த 6 பேரும் நேற்று மாலை காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த திடீர் கட்சித் தாவல் மாயாவதிக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்களான ராஜேந்திர குட், ஜோகேந்திர சிங் அவானா, வாஜிப் அலி, லக்கட் சிங் மீனா, சந்தீப் யாதவ் மற்றும் தீப்சந்த் கேரியா ஆகியோர் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அஷோக் கெலோட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷியை சந்தித்து, தங்களது முடிவைக் குறித்து தெரிவித்துள்ளனர்.
“வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தீர்க்கமாக போராடவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், அரசின் ஸ்திரத்தன்மைக்காகவும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அஷோக் ஜி தான் இந்த மாநிலத்தின் மிகச் சிறந்த முதல்வர். அவரைவிட ஒரு சிறந்த நபர் இருக்க வாய்ப்பில்லை. அவரின் பணி மேன்மையையும் அரசியலையும் நாங்கள் மதிக்கிறோம்” என்று ராஜேந்திர குட், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
கட்சித் தாவிய இன்னொரு எம்.எல்.ஏ அவானா, “எங்களுக்கு அரசியல் களத்தில் பல தடைகள் இருந்தன. ஒரு பக்கம் நாங்கள் காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள அரசுக்கு ஆதரவு தெரிவித்தோம். மறுபக்கம் தேர்தலில் அவர்களுக்கு எதிராக போட்டியிட்டோம். ஆகவேதான் நாங்கள் ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்” என்றார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்ற ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ், 100 இடங்களை வென்றது. பெரும்பான்மை பெற, கட்சிக்கு வெளியே 1 எம்.எல்.ஏ-வின் ஆதரவு தேவைப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் 12 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். இதனால் காங்கிரஸின் பலம் 112 ஆக உயர்ந்தது. தற்போது, அந்த பலம் 118 ஆக அதிகரித்துள்ளது.