This Article is From Apr 30, 2019

‘தனியாக செயல்படக் கூடாது!’- கிரண்பேடிக்கு குட்டுவைத்த உயர் நீதிமன்றம்

2016-ல், புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.

பிப்ரவரி மாதம், புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு எதிரில் தர்ணா போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டார்

Chennai:

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘ஆளுநருக்கு தனியாக செயல்படும் உரிமை கிடையாது' என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.லக்‌ஷ்மிநாராயணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

வழக்கு விசாரணையின்போது லக்‌ஷ்மிநாராயணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காந்திராஜன், ‘இதற்கு முன்னர் நீதிமன்றம், நிதி, நிர்வாகம் மற்றும் சேவைத் துறையில் துணை நிலை ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தது' என்பதைச் சுட்டிக்காட்டினார். 

இதையடுத்து கிரண்பேடிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர் 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த இரண்டு ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

கிரண்பேடி இந்தத் தீர்ப்பு குறித்து இதுவரை எந்தவித கருத்தும் சொல்லவில்லை. 

2017-ல் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியது. அப்போது அவர், மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். மத்திய அரசு, ‘துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக செயல்படும் உரிமையுள்ளது' என்று பதில் கொடுத்தது. 

இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து கிரண்பேடிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கிரண்பேடி, அதில் தலையிட்டார். அப்போது இருவருக்கும் இடையிலான பனிப் போர் உச்சகட்டத்தை எட்டியது. 

2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. புதுச்சேரி அரசு, ‘கிரண்பேடி மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் நடந்து கொள்கிறார்' என்று குற்றம் சாட்டியது. கிரண்பேடி புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளும் வாராந்திர விசிட்டுகளையும் காங்கிரஸ் அரசு விமர்சித்தது. 

இதைத் தொடர்ந்துதான் கடந்த பிப்ரவரி மாதம், புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு எதிரில் தர்ணா போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டார். ஒரு வாரத்துக்கு இந்தப் போராட்டம் நடந்து, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. 

கிரண்பேடி வாட்ஸ் குழு ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் காவல்துறையினருக்கு உத்தரவு போட்டபோது, உரசல் போக்கு மேலும் அதிகரித்தது. 

அதேபோல கிரண்பேடி பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை, மத்திய அரசு பரிந்துரை செய்த எம்.எல்.ஏ-க்களாக அங்கீகரித்தார். அவர்களை புதுச்சேரி சட்டசபை சபாநாயகர், சபைக்குள் அனுமதிக்க மறுத்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் கிரண்பேடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 

இப்படி அடுக்கடுக்காக கிரண்பேடி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், ‘நான் சட்டப்படிதான் அனைத்தையும் செய்து வருகிறேன். ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநராக நான் இருக்கமாட்டேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

.