This Article is From Dec 07, 2018

பெரிய கோயிலில் ‘தியான நிகழ்ச்சி’… இடைக்காலத் தடை… இடமாற்றம்!

தஞ்சாவூரில் சோழர் காலத்து ஆலயமான, ‘பெரிய கோயிலில்' இன்றும் நாளையும் ‘விஞ்ஞான பைரவம்' என்ற தியான நிகழ்ச்சி நடைபெற இருந்தது

Advertisement
தெற்கு Posted by

தஞ்சாவூரில் சோழர் காலத்து ஆலயமான, ‘பெரிய கோயிலில்' இன்றும் நாளையும் ‘விஞ்ஞான பைரவம்' என்ற தியான நிகழ்ச்சி நடைபெற இருந்தது. தனியார் அமைப்பான ‘வாழும் கலை' இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது.

இதையடுத்து, பெரிய கோயிலின் புராதனத் தன்மை பாதிக்கும் என்று கூறி பல தமிழ் அமைப்பினர், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், பிரதீப் குமார் கூறுகையில், ‘விஞ்ஞான பைரவம் நிகழ்ச்சி திட்டமிட்டப்படி இரண்டு நாட்களுக்கு நடக்கும். நிகழ்ச்சிக்கு, பெரிய கோயிலில் இடைக்காலத் தடை இருப்பதால், தனியார் இடத்தில் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார்.

முன்னர் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறை கைது செய்தது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலில் தனிப்பட்ட மதம் சார்ந்த அமைப்பு ஒன்று நிகழ்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் கோயிலைப் பாழ்படுத்துவதற்கே அது வழிவகுக்கும். எனவே டிசம்பர் 7&8 தேதிகளில் நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement
Advertisement