சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றால் ஜூலை 28-ம் தேதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாலை 6.30 மணியளவில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் “ தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக, அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பது சவாலாக உள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிப்பிலும் தீவிர மருத்துவ சிகிச்சையிலும் இருக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில், மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தே, உடல் நிலை குறித்து தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த 10 நாட்களில் முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துமனைக்கு வந்திருக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
முன்னதாக காலையில் கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக, நலம் விசாரிக்க வந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். அவர் கூறியதாவது “ காலையில் மருத்துவமனைக்கு வந்தேன். அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. பின்னர், முன்னேற்றம் பெற்றது. இப்போது கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தொடர்ந்து 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ரஜினிகாந்த் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களும், சினிமா துறையை சேர்ந்தவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் கருணாநிதி மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜனை செலுத்தும் டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.