This Article is From Mar 06, 2020

காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள்.

காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட்
  • அவையில் கடந்த 3 நாட்களாக கடும் அமளி
  • அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் நடவடிக்கை

காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாகக் கூட்டத்தொடர் நடைபெற விடாமல், அவைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள். 

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சபாநாயகர் அதனைத் திட்டவட்டமாக மறுத்ததோடு, ஹோலிக்கு பின்பு விவாதிக்கலாம் என்று தெரிவித்தார். 

மேலும், அத்தகைய கலந்துரையாடலுக்கான நேரம் சரியாக இல்லை என்று வாதிட்ட சபாநாயகர், மார்ச்.11ம் தேதி ஹோலி முடித்த பின்பு விவாதிக்கலாம் என்று உறுதியளித்தார். 

எனினும், காங்கிரஸ் அவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த கோரிக்கையைக் காங்கிரஸ் கைவிடாது என்று உறுதியாகக் கூறிவந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியும், சபாநாயகர் அதனை ஏற்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார். 

இதன் காரணமாக அவையில் கடந்த 3 நாட்களாக கடும் அமளி ஏற்பட்டது. அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அரசு உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி சண்டையில் ஈடுபட்டனர். காகிதங்களைக் கிழித்து நாற்காலியில் வீசினர்.

திங்களன்று நடந்த சலசலப்பைத் தொடர்ந்து, சபாநாயகர் ஒம் பிர்லா அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அவை சீராகச் செயல்பட சில அடிப்படை விதிகளை வகுத்தார். தொடர்ந்து, செவ்வாயன்று உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தங்களது இருக்கைகளைத் தாண்டு எதிர்வரிசைக்குக் கடந்து சென்றால் அந்த அமர்வு முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார். 

.