7 தலை நாகத்தின் சட்டை ஒன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனை அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் பாம்புச் சட்டை கண்டெடுக்கப்பட்ட கிராமத்தில் குவிந்தனர். அதற்கு குங்குமம் பூசி, ஆரத்தி எடுத்து மக்கள் வழிபடத் தொடங்கினர்.
கர்நாடக மாநிலம் கனகபுராவில் உள்ள மரிகோடனா டோடி என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கோயிலுக்கு அருகே விவசாய நிலங்கள் உள்ளன. மிகச்சரியாக கோயிலில் இருந்து 10 அடி தூரத்தில் இந்த பாம்பு சட்டை கண்டெடுக்கப்பட்டது.
இந்த தகவலை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 7 தலை நாகத்தின் சட்டை தொடர்பான வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
6 மாதங்களுக்கு முன்பாக இதேபோன்றதொரு பாம்புச் சட்டை இதே கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், பாம்பு சட்டை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அந்தக் கோயிலுக்கு இருக்கும் சக்தி காரணமாக 7 தலை நாகம் அதன் அருகே வந்திருப்பதாக கிராம மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.