நேற்று முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஹைலைட்ஸ்
- பல்கலைக்கழகத்தை ‘காவிமயமாக்கும்’ நடவடிக்கையை கைவிட வேண்டும், மாணவர்கள்
- 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
- கருத்து சுதந்திரத்துக்கு பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல், மாணவர்கள்
Chennai: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல மாணவ அமைப்புகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தை ‘காவிமயமாக்கும்’ நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த எஸ்.எஃப்.ஐ, ஏ.எஸ்.ஏ, ஏ.பி.எஸ்.எஃப் மற்றும் காங்கிரஸின் என்.எஸ்.யூ.ஐ ஆகியவற்றின் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். பல்கலைக்கழக துணை வேந்தரான குர்மீத் சிங்கைப் பார்க்க வேண்டும் என்று கோரி அவர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாணவ அமைப்பின் தலைவர் ஒருவர், ‘அரபிந்தோ மாணவர்கள் தங்கும் விடுதியில் ஒரு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘இந்து மதம் தான், எல்லாத்துக்கும் மேலான மதம். ஏனென்றால் அது எல்லோரையும் அரவணைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் ஒரு பலகையை எப்படி வைக்கலாம்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாணவர்கள், ‘இது ஒரு மத்திய பல்கலைக்கழகம். உங்கள் மதத்தைப் பற்றி விளம்பரம் செய்ய இது ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் கிடையாது’ என்று பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
இன்னொரு மாணவர், ‘ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. துணை வேந்தர், காவிமயமாக்கலுக்கு துணை போகிறார். மதச்சார்பற்ற ஒரு சூழலை பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும். வளாகத்தில் இருக்கும் வை-ஃபை வசதியையும் அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் மூலம் எங்கள் போராட்டத்தைப் பற்றி வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.
கருத்து சுதந்திரத்துக்கு பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல் இருப்பதாக பல மாணவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இது குறித்து இன்னொரு மாணவர், ‘6 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படக் கூடாது என்ற புதிய விதிமுறையை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், எங்களுக்கு 24 மணி நேரமும் நூலகத்துக்குச் செல்லும் வசதி செய்து தரப்பட வேண்டும். 10 மணி வரை நூலகம் திறந்திருக்க வேண்டும் என்று விதி இருந்தாலும், 5 மணிக்கெல்லாம் அது மூடப்படுகிறது’ என்று கூறினார்.
ஒரு மாணவி, ‘நாப்கின் தரும் இயந்திரங்களை பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுமாறு தொடர்ந்து கோரி வருகிறோம். அப்போது போதுமான நிதி இல்லை என்றனர். ஆனால், இப்போது என்ஏஏசி ஆய்வு நடக்க உள்ளதால், கட்டடங்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
மாணவர்களின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ், ‘வலதுசாரி அமைப்பின் அஜெண்டாவுக்கு இங்கு இடமில்லை. வை-ஃபையைப் பொறுத்தவரை சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. அது சரிசெய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை முன்னேற்ற துணை வேந்தர் அயராது உழைத்து வருகிறார்’ என்று கூறினார்.