பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வீடியோ கான்ஃப்ரென்சிங் முறையில் விசாரித்தார் நீதிபதி என்.கிருபாகரன்.
அப்போது அவர், ‘புனித பூமி என்ற சொல்லப்படும் நம் நாடு பலாத்கார நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் கூட பாலியல் வெறி கொண்ட கொடூரர்களால் விட்டுவைக்கப்படுவதில்லை. இந்த சமூக கட்டமைப்பிலோ அல்லது ஆண்களின் மன நிலையிலோ எதோ ஒன்று தவறாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் பல கேள்விகள் எழுப்பியிருந்தோம். அதேபோல தமிழக உள்துறை செயலாளருக்கும் கேள்விகள் எழுப்பியிருந்தோம். இதுவரை அதற்கு எந்த பதிலும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அளிக்கப்படவில்லை. அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்றால், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும் போது நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், பாலியல் தாக்குதல்களை சமாளிக்க பெண்களுக்கு எதாவது பாதுகாப்பு சாதனம் வழங்கலாமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுவரை அதற்கு அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)