This Article is From Feb 13, 2019

ஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கில் நாளை தீர்ப்பு..!

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

ஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கில் நாளை தீர்ப்பு..!

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி,யாக உள்ள முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.பி. ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்த ஐ.ஜி.முருகன், லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே விசாரணைக்குழு உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதேபோல், முருகனை பணியிட மாற்றம் செய்யக் கோரி, புகார் தெரிவித்த பெண் எஸ்.பி.யும் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஐஜி-க்கு எதிராக பெண் எஸ்.பி. காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை கருத்தில் கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும், இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, ஐஜி-க்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார்மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

.