This Article is From Jul 11, 2018

ட்விட்டரில் 'ரேபிஸ்தான்' கருத்து கூறியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷா ஃபசல் என்ற அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘ரேபிஸ்தான்' என்று குறிப்பிட்டு ஒரு ட்வீட், சமூக வலைதளத்தில் திடீர் சர்ச்சையை எழுப்பியது

ட்விட்டரில் 'ரேபிஸ்தான்' கருத்து கூறியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை
NEW DELHI:

பாலியல் வன்முறைகள் குறித்து, நகைக்கும் வகையில் சாதாரணமாக ட்வீட் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷா ஃபசல் என்ற அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘ரேபிஸ்தான்' என்று குறிப்பிட்டு ஒரு ட்வீட்டை ஏப்ரல் மாதம் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் சமூக வலைதளத்தில் திடீர் சர்ச்சையை எழுப்பியது.

யூ.பி.எஸ்.சி தேர்வுகளில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஹார்வேர்டு கென்னடி பள்ளியில் ஆராய்ச்சி மாணவராக விடுப்பில் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸையும் சேர்த்து பதிவிட்ட ஷா ஃபசல் “ தெற்காசியாவில் நிலவும் பாலியல் வன்முறை கலாச்சாரத்தை நகைப்புக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்த எனக்கு கிடைத்த பரிசு இது. காலனித்து தன்மை கொண்ட விதிமுறைகள், ஜனநாயக இந்தியாவில், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக திணிக்கப்படுகிறது. இந்த விதிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே, இந்த நோட்டீஸை இங்கே பகிர்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இத்தனைக்கும் தான் பதிவிட்டதை ஏன் இந்தியாவை குறிப்பிட்டதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றும் ஃபசல் கேள்வி எழுப்புகிறார். மேலும் “ பாலியல் வன்முறை அரசின் கொள்கையாக இருந்தால், நான் அரசு கொள்கையை விமரிச்சித்த குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றும் ஃபசல் பதிவிட்டிருந்தார்.

 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2016-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கங்வார் என்ற மாவட்ட ஆட்சியர், முன்னாள் பிரதமர் நேருவை புகழ்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு பரேலியில் மாவட்ட குற்றவியல் நீதிபதி, ராகவேந்திர விக்ரம் சிங் மீதும் ஃபேஸ்புக் பதிவுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நடந்த மதக் கலவரங்களுக்கு, ஹிந்துத்துவ அமைப்புகள் தான் காரணம் என்று அவர் பதிவிட்டிருந்தது தான் நடவடிக்கைக்கு காரணம்.

.