"நீங்கள் யார் தூண்டுதலின் பேரில் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது” -Shah Mahmood Qureshi
Islamabad: ஜம்மூ காஷ்மீர் (Jammu and Kashmir) விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த நிலைப்பாட்டுக்கு உலக அளவில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) சமீபத்தில் தான் ஆற்றிய ஐ.நா (UN) உரையில் சொன்னார். இதைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியிடம் (Shah Mahmood Qureshi) கேள்வி கேட்டது. இதனால் உச்சகட்ட கோபமடைந்தார் குரேஷி.
எக்ஸ்பிரஸ் நியூஸ் என்னும் செய்தி சேனலுக்கு குரேஷி, நேர்காணல் கொடுத்தார். அப்போது நெறியாளர், “58 நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவாக இருப்பதாக சொல்கிறீர்கள். அது எவை என்று சொல்ல முடியுமா?” என்றார்.
இதற்கு கடுப்பான குரேஷி, “யாரின் தூண்டுதலோடு இப்படி கேள்வி கேட்கிறீர்கள்” என்று உஷ்ணமானார். மெஹ்மூத் குரேஷி, இம்ரான் கானின், '58 நாடுகள் ஆதரவு' உரையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே நெறியாளர் அமைச்சர் குரேஷியிடம் அப்படியொரு கேள்வியை எழுப்ப வேண்டியிருந்தது.
ட்விட்டர் மூலம் இதே கருத்தை அவர் தெரிவித்துள்ளார் என்பதையும் நெறியாளர் சொன்ன பிறகு, “அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. அந்த ட்வீட் பதிவை எடுத்துக் காட்டுங்கள்” என்று கூச்சலிட்டுள்ளார்.
தொடர்ந்து நெறியாளர் ட்வீட் பதிவைக் காட்டியுள்ளார். அதற்கு அமைச்சர் குரேஷி, “நான் என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், நீங்கள் யார் தூண்டுதலின் பேரில் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது” என்று முடித்துக் கொண்டார்.