This Article is From Feb 18, 2020

சென்னையில் ஒரு ’Shaheen Bagh’; “CAA-வை திரும்பிப்பெறு…”- வலுக்கும் எதிர்ப்புக்குரல்!!

“இந்தப் போராட்டம் 4 நாட்களைக் கடந்துள்ளதைப் பெருமையாக நினைக்கிறோம்"

Advertisement
இந்தியா Edited by

"பிரதமர் மோடி சிஏஏ பற்றி சொல்லும் விளக்கங்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை"

தமிழக தலைநகர் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக 'ஷாகீன் பாக்' போன்ற போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. வெள்ளியன்று தமிழக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் காவல்துறை தரப்போ, காவலர்கள் தாக்கப்பட்டதனால் அப்படிச் செயல்பட வேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் இரவு பகல் பாராமல் போராட்டம் நடக்கிறது. இதைப் போலவே தற்போது சென்னை, வண்ணாரப்பட்டையிலும் போராட்டம் நடந்து வருகிறது.

தற்போது நடந்து வரும் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாகத் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்துப் பேசியுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அமைச்சர் ஜெயக்குமார் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார். 

Advertisement

வண்ணாரப்பட்டேயில் 5 -வது நாளாகத் தொடர்ந்து வரும் சிஏஏவுக்கு எதிரான போராட்டக் களத்தில், NDTV நிருபரிடம் பேசிய சில பெண்கள், “இந்தப் போராட்டமானது ஷாகீன் பாக் போராட்டத்திலிருந்து ஊக்கம் பெற்று நடப்பதாக நினைக்கவில்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு சிஏஏவுக்கு எதிராக இருக்கும் உணர்வு எங்களுக்கும் இருக்கிறது என்பதாகப் பார்க்கிறோம். நாட்டை ஆளும் அரசு, சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் குறித்தான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பிப் பெற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

பிரதமர் மோடி சிஏஏ பற்றி சொல்லும் விளக்கங்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. சிஏஏ சட்டத்தில் மற்ற மதத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களை மட்டும் நீக்கியது ஏன் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன்.” என்றார் ஒருவர்,

Advertisement

இன்னொருவர், “இந்தப் போராட்டம் 4 நாட்களைக் கடந்துள்ளதைப் பெருமையாக நினைக்கிறோம். இந்த நாட்டில் பிறந்த எங்கள் குழந்தைகள், இந்தியக் குடிமக்களாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே வேண்டுகோள்,” என்று தீர்க்கமாகத் தெரிவித்தார். 


Advertisement