This Article is From Jun 27, 2020

அதிமுக அரசின் 2000 கோடி ஒப்பந்த ஊழல் டெல்லி முதல் சென்னை வரை சந்தி சிரிக்கின்றது: மு.க ஸ்டாலின்

வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்!

Advertisement
தமிழ்நாடு Written by

"அதிமுக அரசின் 2000 கோடி ஒப்பந்த ஊழல்: சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது" என மு.க ஸ்டாலின் மாநில அரசினை விமர்சித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது!

பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த புகாரில் "முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக", உயர்நீதிமன்றத்தில் கழக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை; “ஊழலே நடக்கவில்லை" என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள்.

வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்!

Advertisement

டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால் - இதில் "ஊழல் இல்லை; முறைகேடு இல்லை", "மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை" "எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார்" என்றெல்லாம் "பச்சைப் பொய்" சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜிநாமா செய்வாரா? அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?

முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? "முகாந்திரம் இல்லை" என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முதலமைச்சர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.“ என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement