This Article is From May 26, 2020

மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா..? - ஆளுநரை சந்தித்த சரத் பவார்!

ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து சரத் பவார்...

மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா..? - ஆளுநரை சந்தித்த சரத் பவார்!

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான்.

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிராவில் காங் - தே. காங் - சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது
  • சிவ சேனாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்
  • கொரோனா வைரஸால் தத்தளித்து வருகிறது மகாராஷ்டிரா
Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனாவுக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வருவதாக சலசலக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்று அம்மாநில ஆளுநரை நேரில் சென்று சந்தித்துள்ளார் பவார். இதனால், மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து சரத் பவார், “ஆளுநரை சந்தித்தது சாதாரணமாகத்தான். மகாராஷ்டிர அரசுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர்,” என்று மட்டும் பூடகமாக கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். இந்த நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக சரத் பவார், கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து முழு முடக்க நடவடிக்கையில் தளர்வு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

கூட்டணியில் குழுப்பம் குறித்து பவார், “இந்த நேரத்தில் எம்எல்ஏ-க்களை முகாம் மாற்ற முயற்சி செய்தால் மக்களே அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்,“ என்று கூறியுள்ளார். 

.