பொதுத் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பரிந்துரை செய்ய வேண்டாம் என கட்சி நிர்வாகிகளை சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Mumbai: நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி மகாராஷ்டிராவில் பரவலாக எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள கட்சித் தலைவர் அஜித் பவார், வரும் பொதுத் தேர்தலில் சரத் பவார் போட்டியிட மாட்டார் என்று கூறியுள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள் தனது பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று சரத் பவார் கூறியதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜித் பவார் அளித்துள்ள பேட்டியில், சரத் பவார் கட்சியின் மூத்த தலைவராக தொடர்ந்து இருப்பார். அவருக்கு இப்போது 78 வயது ஆகிறது. இதனால் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் அவரை பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று சரத் பவார் தெளிவுபடுத்தியதாக அஜித் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் 50-50 என்ற அடிப்படையில் தன்னுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி வருகிறது. 2014-ல் இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்தன. இதில் காங்கிரஸ் 27 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 21 இடங்களிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் 12-ம் தேதி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி மட்டும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.