This Article is From Nov 18, 2019

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்குமா? - சரத் பவாரின் அலட்சிய பதிலால் சர்ச்சை!!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசுகிறார். இதன் பின்னர், சிவசேனாவை இரு கட்சிகளும் ஆதரிக்குமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

மும்பையில் செய்தியாளர்களுக்கு சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அளித்திருக்கும் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தும் முயற்சிகள் மகாராஷ்டிராவில் நடந்து வருகின்றன. இதற்காக அடிப்படை செயல் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த அடிப்படை செயல் திட்டத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓரளவு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சோனியாவை சந்தித்து பேசிய பின்னர்தான் இதற்கு காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் நேற்று சந்திப்பார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் தேதி மாற்றப்பட்டு சந்திப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சோனியாவை சந்திப்பதற்கு டெல்லி கிளம்புவதற்கு முன்பாக மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் அரசு ஏற்படும் என நம்புகிறீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த பவார், 'தேர்தலில் சிவசேனாவும் - பாஜகவும் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். நாங்களும், காங்கிரசும் சேர்ந்து போட்டியிட்டோம். அப்படியிருக்கையில் நீங்கள் சொல்வது எப்படி சாத்தியப்படும். பாஜகவும், சிவசேனாவும் ஒருவிதமான அரசியல் செய்கிறார்கள். நாங்கள் எங்கள் அரசியல் பாதையில் செல்கிறோம்' என்றார். 

'சரத் பவாருடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்று சிவசேனா கூறியுள்ளதே?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'உண்மையாகவா?' என்று சந்தேகம் எழுப்பும் வகையில் பவார் பதில் அளித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய பவார், தற்போது அதற்கு முரணாக பதில் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

.