This Article is From Jul 08, 2018

தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

தெலுங்கானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஷரத் கொப்பு, அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

ஹைலைட்ஸ்

  • ஷரத் கொப்பு மிஸ்ஸோரி பல்கலை.,யில் பயின்று வருகிறார்
  • கொலையாளியின் உருவம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது
  • ஷரத்தின் உடலை இந்தியாவுக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
Kansas City/Hyderabad:

தெலுங்கானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஷரத் கொப்பு, அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஷரத், தெலுங்கானாவில் பொறியியல் படித்து முடித்து, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, முதுகலை பட்டம் பெற அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மிஸ்ஸோரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். மேலும், பகுதி நேரமாக ஜே’ஸ் ஃபிஷ் அண்டு சிக்கன் மார்கெட் என்ற உணவகத்திலும் பணி புரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கான்சாஸ் நகர நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஒரு மர்ம நபர் ஷரத் வேலை செய்து கொண்டிருக்கும் உணவகத்துக்கு வந்துள்ளார். அவர் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு உணவகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதைக் கண்ட அனைவரும் தரையில் படுக்க, ஷரத் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஒட முயன்றுள்ளார். அப்போது, அந்த மர்ம நபர் ஷரத்தை சுட்டுள்ளார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உள்ளூர் போலீஸார், ஷரத்தை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு சொல்லப்படுகிறது. உணவகத்திலிருந்து சிசிடிவி கேமராவில் கொலையாளியின் முழு உருவம் பதிவாகியுள்ளது. அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, தெலுங்கானாவில் இருக்கும் ஷரத்தின் குடும்பத்தாருக்கு நடந்த விஷயம் குறித்து தெரியபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஷரத்தின் உடலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
 

sharath koppu 650

ஷரத் இறந்ததையடுத்து, அமெரிக்காவில் இருக்கும் அவரது உறவினரான ரகு சௌதாவரம் ஷரத்தின் குடும்த்துக்கு நிதி சேகரித்து வருகிறார். இன்று காலை வரை 45,000 டாலர் நிதி அதன் மூலம் திரப்பட்டுள்ளது. 

ஷரத் வேலை செய்த உணவகத்தின் உரிமையாளர் ஷாஹித் நடந்த துயர சம்பவம் குறித்து, ‘உணவகத்தில் இருந்த அனைவரும் தரையில் படுத்தபோது, ஷரத் மட்டும் வெளியே ஓடினார். இதைப் பார்த்த கொலையாளி ஷரத்தை பின் பக்கம் சுட்டார். இதையடுத்து, ஷரத் தரையில் விழுந்தார்’ என்று விவரிக்கிறார்.

சென்ற ஆண்டு ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா, கான்சாஸ் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.