"முல்லைப்பெரியாறு அணையின் கேரள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவை அளக்க தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவின் அளவு குறித்த தகவல்களை தமிழகத்தோடு அவ்வப்போது உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மழைப்பொழிவை அளக்க விடாமல் தமிழக அதிகாரிகளை கேரளா தடுக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதை வைத்தே நீர்வரத்து அளவைக் கணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழக நீர்வளத்துறையினர் முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்குவது, திறந்துவிடுவது ஆகியவற்றை நீர்வரத்து அளவை வைத்தே செய்து வருகின்றனர். ஆகவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவின் அளவைப் பற்றிய தகவல்களைத் தமிழக அதிகாரிகளுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளுமாறு தங்களது மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறேன்" என்று பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர், கேரள மின்வாரியத்தைப் பல முறை தொடர்புகொண்டும் மின்சார விநியோகம் சரிசெய்யப்படவில்லை. அணைக்கும் அணையைச் சார்ந்த பிற கட்டுமானங்களுக்கும் மின்சாரத்தை மீண்டும் விநியோகியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மின்சார சப்ளைக்காக தமிழக அரசு கேரள மின்வாரியத்துக்கு 1.65கோடி கட்டியுள்ளதையும் பழனிசாமி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
"முல்லைப்பெரியாறு அனைத்து வகைகளிலும் பாதுகாப்பாக உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவினர் தொடர்ந்து அணையைக் கண்காணித்து வருகிறார்கள். கடைசியாக ஆகஸ்ட் 4 அன்று நடத்திய ஆய்விலும் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்குவதில் பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லை என்று அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அனுமதித்த 142 அடி அளவுக்கே அணையில் நீர் தேக்கப்படுகிறது. இயன்ற அளவுக்கு அணையிலிருந்து நீர் வைகை ஆற்று வடிநிலப் பகுதிகளுக்குத் திறந்துவிடப்பட்டும் வருகிறது. அணைப்பகுதியில் வசிக்கும் கேரள மக்களுக்கும் இதுகுறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை தமிழக நீர்வளத்துறை வழங்கி வருகிறது" என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இயக்கும், பராமரிக்கும் உரிமை தமிழக அரசிடமே உள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)