ஹைலைட்ஸ்
- மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கருத்து வேறுபாடு உள்ளது, தரூர்
- மோடியைக் கட்டுப்படுத்த ஆர்.எஸ்.எஸ் திணருகிறது, தரூர்
- பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் தான் தரூர் இப்படி பேசியுள்ளார்.
Bengaluru: காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தரூர், ‘மோடியை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எனக்குத் தெரிந்த பத்திரிகையாளரிடம் வருத்தப்பட்டுள்ளார். அவர் மேலும், ‘மோடி, சிவ லிங்கத்தின் மேலே இருக்கும் தேள் போன்றவர். அவரை கையால் அகற்றவும் முடியாது. செருப்பைக் கொண்டு அடித்தும் விரட்ட முடியாது' என்று அந்தப் பத்திரிகையாளரிடம் கூறினாராம்' என்றுள்ளார்.
சசி தரூரின் இந்த சர்ச்சைக் கருத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தரூரின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், ‘ராகுல் காந்தி, நீங்கள் ஒரு சிவ பக்தர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். தற்போது சசி தரூரின் மிகத் தரக்குறைவான கருத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?' என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசி தரூரின் இந்தக் கருத்து குறித்து, ட்விட்டரிலும் நிறைய பேர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். சசி தரூர், சமீப காலமாக பேசி வருவது சர்ச்சையைக் கிளப்பும் வகையில் அமைந்து வருகிறது.
சென்ற மாதம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய தரூர், ‘2019 ஆம் ஆண்டு பாஜக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், தற்போது இருக்கும் சட்ட சாசனத்தை கிழித்திவிட்டு புதிதாக ஒன்றை இயற்றுவார்கள். இந்து ராஷ்டிரத்தின் கொள்கைகள் அந்த சாசனத்தில் இடம் பெறும். சிறுபான்மையினரின் உரிமைகள் அதில் பறிக்கப்படும். அந்த சாசனம், இந்து பாகிஸ்தானை உருவாக்கும். காந்தி, நேரு, படேல், அசாத் போன்ற நமது முன்னோடிகளும் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களும் கனவு கண்ட தேசமாக அது இருக்காது' என்று மோடியையும் பாஜக-வையும் காட்டமாக விமர்சித்தார்.