தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் - சசி தரூர். (File)
New Delhi: தீபிகாவுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில், 'சபாக்' திரைப்படத்திற்கு மாணவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்க கட்சி ஏற்பாடு செய்து வருகிறது, இதன் மூலம் யாரும் அவரை புறக்கணிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சசி தரூரிடம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், தீபிகாவின் 'சபாக்' மற்றும் அஜிய் தேவ்கானின் 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்‘ திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவது, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இலவச டிக்கெட்டுகளை வழங்குவதற்கான போட்டியாக மாறியுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சசி தரூர், தீபிகாவின் திரைப்படத்தை புறக்கணிக்க ஏராளமானோர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம் என்றார்.
"நாட்டில் யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து, அதனால் எங்கள் ஆதரவை காட்ட எங்கள் கட்சித் தலைவர்கள் மாணவர்களுக்கு 'சபாக்' திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்" என்றார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி கும்பல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து, பல பாஜக தலைவர்கள் தீபிகாவின் ‘சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்குமாறு தங்கள் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் 'சபாக்' திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும், சபாக் திரைப்படத்திற்கு விரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.