திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் சசி தரூர் போட்டியிடுகிறார்.
New Delhi: தென் மாநிலங்கள்தான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
நாட்டின் அரசியல் தலையெழுத்தை தீர்மானிப்பதில் தென் மாநிலங்கள் முக்கிய பங்கை வகிக்கும். குறிப்பாக தென் மாநிங்கள்தான் பிரதமர் மோடியை இந்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பும்.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
தென் மாநிலமான கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இது காங்கிரசுக்கு மேலும் வலிமை சேர்க்கும். தகுதி வாய்ந்த பிரதமர் வேட்பாளர்கள் தென் மாநிலங்களில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
தென் மாநிலங்கள் முழுவதும் காங்கிரசுக்கு உறுதுணையாக இருக்கின்றன. மத்தியில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நடக்கும். அது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும்.
நாட்டின் பிரதமர் ஆகக்கூடிய தகுதிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் உள்ளன. இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
சசி தரூர் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருந்திருக்கிறார். 2 முறை திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசி தரூர், தற்போது 3-ம் முறையாக களம் காணுகிறார்.