ஹைலைட்ஸ்
- பாஜக வென்றால் சிறுபான்மையினர் நலன் பாதிக்கப்படும், தரூர்
- மேலும், 'பாஜக புதிய சட்ட சாசனத்தை எழுதும்' என்றுள்ளார் தரூர்
- தரூரின் கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக
Thiruvananthapuram: காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், ‘பாஜக மட்டும் வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகும்’ என்று காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய தரூர், ‘2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால், நமது சட்ட சாசனம் இப்போது இருப்பது போன்று கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்குத் தேவையானபடி சாசனத்தை மாற்றிக் கொள்வார்கள். அந்தப் புதிய அரசியல் சட்ட சாசனம் இந்து ராஷ்டிரத்துக்கு ஏற்றாற் போல் இருக்கும். அது சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கும். அது இந்து பாகிஸ்தானை உருவாக்கும். நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த வீரர்களான காந்தி, படேல், நேரு போன்றவர்களின் கனவு அதுவல்ல’ என்று பேசினார்.
இதற்கு பாஜக தரப்பு உடனடியாக பதிலடி கொடுத்தது. பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘சசி தரூரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். பாகிஸ்தான் உருவாவதற்கே காங்கிரஸ் தான் காரணம். தற்போது, இந்தியாவையும் இந்துக்களையும் தலைகுனிய வைக்கும் அளவுக்கு ஒரு கருத்தை சொல்லியுள்ளது காங்கிரஸ்’ என்று கூறினார்.