New Delhi: புது டெல்லியில் தனது இந்து மனைவிக்கு, அவர் சார்ந்த மத முறைப்படி இறுதிச் சடங்கை செய்ய முயன்றுள்ளார் முஸ்லிம் கணவர். ஆனால், ‘ஒரு முஸ்லிமை திருமணம் செய்த பின்னர் அவள் இந்து இல்லை’ என்று சொல்லி இறுதிச் சடங்கை செய்ய நிராகரித்துள்ளது டெல்லியைச் சேர்ந்த கோயில் ஒன்று.
கொல்கத்தாவின் இம்தியசூர் ரஹ்மான் - நிவேதிதா கட்டக் தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக மணமுடித்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நிவேதிதாவுக்கு சமீபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை புது டெல்லிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளார் ரஹ்மான். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சென்ற வாரம் நிவேதிதா மறைந்தார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள நிகாம் போக் கட் பகுதியில் நிவேதிதா இந்து முறைப்படி எரியூட்டப்பட்டார். ஆனால், இந்து முறைப்படி சில சடங்குகளை அவர்களால் செய்ய முடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து ரஹ்மான், ‘வங்காளிகள் அதிகம் இருக்கும் சித்தரஞ்சன் பூங்காவில் இருக்கும் களி மந்தீரில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இறுதிச்சடங்குகள் செய்ய நான் பதிவு செய்திருந்தேன். ஆனால், திடீரென்று என் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கோயில் நிர்வாகம் ‘சில காரணங்களுக்காக’ என் பதிவு செய்யப்பட்டது’ என்றார்.
சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகியின் தலைவர் அஷிதவா போவ்மிக், ‘ரஹ்மானின் விண்ணப்பத்தை ரத்து செய்ய நிறைய காரணங்கள் இருந்தன. அவர், தன் பெயரைக் கொடுத்து விண்ணப்பிக்காமல், தனது மகளின் பெயரை கொடுத்து பதிவு செய்தார். அப்போது தான், அவர் குறித்த சந்தேகம் எங்களுக்கு வந்தது. கோயில் நிர்வாகம் அவரின் கோத்திரம் குறித்து விசாரித்தது. அதற்கு அவரிடம் பதில் இல்லை. முஸ்லிம்கள்தான் கோத்திரத்தை பின்பற்ற மாட்டார்களே. எனவே, முஸ்லிமை கல்யாணம் செய்த அவரின் மனைவி இந்து கிடையாது’ என்றவர்,
தொடர்ந்து, ‘இந்து முறைப்படி இறுதிச் சடங்கை செய்ய வேண்டுமென ரஹ்மான் நினைத்தால் அதை அவர் வீட்டிலேயே செய்திருக்கலாம். ஏன் கொல்கத்தாவில் அதைச் செய்யாமல் டெல்லியில் செய்ய முனைகிறார்? அவருக்கு வேறு எதாவது காரணங்கள் இருந்திருக்கலாம்’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரஹ்மான், ‘எனக்கும் என் மனைவிக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகளில் சுதந்திரம் இருந்தது. அவர் இந்து முறைப்படி தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பார். ஆனால், அதற்கு எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை’ என்று வருந்தினார்.