This Article is From Dec 31, 2018

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி

வங்க தேசத்தில் ஆட்சியைப் பிடிக்க 151 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி 288 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி

கடந்த 30 ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவும், கலீடா ஜியாவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர்.

Dhaka:

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலையொட்டி நடந்த வன்முறையின்போது ஷேக் ஹசீனா மற்றும் கலீடா ஜியாவின் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்க தேச நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றால் அதற்கு 151 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும் அதன் கூட்டணியும் சேர்ந்து மொத்தம் 288 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சிக்கு மொத்தமே 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் அதனை வங்கதேச தேசிய கட்சியான பி.என்.பி. ஏற்க மறுத்து வருகிறது. அக்கட்சியின் தலைவராக இருக்கும் கமால் உசைன் அளித்த பேட்டியில், '' புதிதாக மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்துகிறோம். தற்போதுள்ள அரசு ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. நடுநிலையான அரசு அமைந்தால் மட்டுமே தேர்தல் முறையாக நடக்கும்.'' என்றார்.

பி.என்.பி. கட்சியின் செய்தி தொடர்பாளர் முஅசம் உசேன் கூறுகையில், 300 -ல் 221 தொகுதிகளில் முறைகேடு நடந்திருக்கிறது. இதனை ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியினர் செய்துள்ளனர் என்றார்.

தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் அசாதுசமான் கூறுகையில், '' வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

முன்னதாக நடந்த வன்முறையின்போது ஹசினா மற்றும் கலிடா ஜியாவின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். வன்முறைகளை கட்டுப்படுத்த 6 லட்சம் படை வீரர்கள் நாடு முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் வன்முறையின்போது மட்டும் மொத்தம் 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

.