மக்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கான்ராட் சங்மா ஒரு போலீஸ்காரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Shillong: கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் முடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் சமூக விலகியிருத்தல் நடைமுறையைப் பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மேகாலயா மாநில முதல்வர் அம்மாநிலத்தின் ஷில்லாங் பகுதிகளின் வீதிகளில் இறங்கி மக்களுக்கு நேரடியாக கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு செய்திருக்கிறார்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா ஷில்லாங் வீதிகளில் மக்களிடையே சமூக விலகியிருத்தல் நடவடிக்கையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்துப் பேசியிருக்கிறார்.
அதில், “இந்த தொற்றானது ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் எளிதில் பரவுகிறது. இது உங்கள் பாதுகாப்பிற்கான அறிவுரை. சாலைகளிலும், பொது வெளியிலும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடியுங்கள். சாலைகளில் இடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறை அடையாளங்களை பின்பற்றுங்கள்" என்று முதல்வர் கான்ராட் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றுவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 149 நோயாளிகள் புதியதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறிய குறைந்தப்பட்டசம் 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தொற்றை எதிர்த்துப் போராட அணைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவில் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்நாட்டு விமானச் சேவை தடையானது மார்ச் 31 முதல் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக என டி.ஜ.சி. ஏ குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஏப்ரல் 14 அமலில் இருக்கின்றது.
முடக்க நடவடிக்கையின் போது ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். பிரதமர் அறிவித்த இந்த முடக்க நடவடிக்கை காரணமாகப் பல இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பப் போக்குவரத்து வசதியில்லாததால் நடந்தே புலம் பெயர்ந்து வருகின்றனர்.
மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா அம்மாநில மக்களுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேகாலயா மாநிலத்தில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.