This Article is From Nov 16, 2019

குதிரை பேரம்… மேட்ச் ஃபிக்சிங்… BJP-ஐ விடாமல் துரத்தும் சிவசேனா!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது.

பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

Mumbai:

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா இடையில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலைநில், சிவசேனா, தனது அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா' மூலம், பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளது. 

சமீபத்தில் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மகாராஷ்டிராவில் தங்களுக்கு 14 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவையும் சேர்த்து 119 பேரின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையில் அமையப் போகும் கூட்டணி குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது பாஜக தரப்பு. 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், மகாராஷ்டிர அரசியல் நிலையை, “கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எதுவும் நடக்கலாம். சில நேரங்களில் நீங்கள் போட்டியில் தோற்பதாக நினைக்கலாம். ஆனால், உண்மையில் முடிவு என்பது அதற்கு நேர் மாறானதாக இருக்கும்,” என்றார்.

இதை மேற்கோள் காட்டி சிவசேனா தரப்பு, “இன்று நடக்கும் விளையாட்டுகளில் கிரிக்கெட் குறைவானதாக மாறிவிட்டது. வியாபாரம்தான் அதிகமாக இருக்கிறது. அதேபோல ஒரு தரப்பு மேட்ச் ஃபிக்ஸிங் மூலம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது,” என்று சூசகமாக விமர்சித்திருந்தது. 

sharad pawar sonia gandhi afp

சரத் பவார் - சோனியா காந்தி சந்திப்பு, கூட்டணி உடன்பாட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (Sharad Pawar) மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) ஆகியோர் வரும் ஞாயிற்றுக் கிழமை நேரில் சந்தித்துப் கூட்டணி அரசு அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சியைமப்பதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைக்கும் நடவடிக்கையாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை (Common Minimum Programme) உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

குறைந்தபட்ச செயல் திட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

முன்னதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால், 6 மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று கிண்டல் செய்திருந்தார். 

அவரை கலாய்த்த சரத் பவார், 'எனக்கு தேவேந்திர பட்னாவீசை கடந்த சில ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் ஜோசியம் பார்ப்பார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்கள் அமைக்கும் கூட்டணி அரசு முழு ஆட்சியையும் நிறைவு செய்யும்,' என்று கூறினார். 
 

.