கேரள சிவசேனா உறுப்பினர் பெரிங்கமலா அஜி.
Trivandrum: அடுத்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க உள்ள நிலையில், திரிசனத்திற்காக இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கேரளாவில் உள்ள சிவசேனாவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள சிவசேனாவை சேர்ந்த பெரிங்கமலா அஜி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வரும் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில், பம்பை ஆற்றில் தற்கொலை போராட்டம் நடத்த உள்ளோம்.
சிவசேனாவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் பம்பை ஆற்றை முற்றுகையிடுவோம். இளம் பெண்கள் யாராவது சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தால், எங்கள் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சபரிமலைக்குள் பெண்கள் செல்வதற்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்.1ஆம் தேதியில் சிவசேனா மாநிலம் முழுவதும் 12 மணி நேர போராட்டத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.