புர்காவை விமர்சித்து சிவசேனா பத்திரிகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
Mumbai: இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அவர்களுடன் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 மாநிலங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது-
இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர கால அடிப்படையில் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஏனென்றால் புர்கா அணிந்திருப்பவர்களை அடையாளம் காண்பதில் பாதுகாப்பு படையினர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று டெய்லி மிரர் நாளிதழும் புர்கா தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அந்த நாளிதழ் அளித்த தகவலின்படி, புர்கா தடை குறித்து முஸ்லிம் மத தலைவர்கள், சில அமைச்சர்களுடன் இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-களில் வளைகுடா போர் நடப்பதற்கு முன்பாக புர்கா அணிவது என்பது இலங்கை முஸ்லிம் பெண்களின் வழக்கத்தில் இல்லை என்றும், அடிப்படைவாதிகள் இதனை புகுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.