நெஞ்சு வலி காரணமாக சஞ்சய் ராவத் லீலாவதி மருத்துவனையில் அனுமதி. (File)
Mumbai: சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழலில் தினமும் தங்களது கட்சி நிலைப்பாடு குறித்து ஊடங்கங்களை சந்தித்து வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் அளித்த தகவலின்படி, லேசான நெஞ்சு வலி காரணமாக சஞ்சய் ராவத் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு மருத்துவர் ஜலீல் பார்கர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் முன்னதாக வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சஞ்சய் ராவத் மருத்துவமனை வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு இசிஜி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவை தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை மேலும் சில பரிசோதனைகளுக்காக மருத்துவமனை வரும்படி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், அவருக்கு 'ஆஞ்சியோகிராபி' செய்ய வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் இன்று மாலை தகவல் தெரிவிப்பார்கள் என்றவர், நாளை அவர் வீடு திரும்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னாவின்' நிர்வாக ஆசிரியர் ஆவார். அதில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டை மிக உறுதியுடன் சஞ்சய் ராவத் தெரிவித்து வந்தார்.
கடந்த அக்.24ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் பாஜகவுடன் நடந்து வரும் அதிகாரப்பகிர்வு மோதல் தொடர்பாக தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதும், ட்வீட்டரில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதும், என சஞ்சய் ராவத் பரபரப்பாக இயங்கி வந்தார்.