சிவசேனாவும், பாஜகவும் தனித்தனியே ஆளுநரை சந்தித்து அதிகாரப்பங்கீடு குறித்து விவாதித்தது. (File Photo)
Mumbai: மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சி அமைக்க கூட்டணி கட்சியான பாஜகவுடன் "50:50" சதவீத அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று மாலையில் நேரில் சந்தித்தார்.
இந்த வாரத்திலே சிவசேனா கட்சி ஆளுநரை சந்திப்பது இரண்டாவது முறையாகும். கடந்த திங்களன்று சிவசேனாவும், பாஜகவும் தனித்தனியே ஆளுநரை சந்தித்து அதிகாரப்பங்கீடு குறித்து விவாதித்தது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக - சிவசேனா கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்பதில் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. பெரும்பான்மை பெற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
சிவசேனா சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வென்ற 56 சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் கட்சியின் நிபந்தனைகளுக்கு பாஜக, எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதிகாரத்தில் இருவருக்கும் சரிபாதி பங்கு என்கிற சிவசேனாவின் கோரிக்கையைத்தான், அந்தக் கட்சி எழுத்துப்பூர்வமாக எதிர்பார்க்கிறது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, இந்த முறை தேர்தலில் நின்று வெற்றியடைந்துள்ளார். அவர் சிவசேனா சார்பில் முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா ஆளுநரை சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்யா தாக்கரே, மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆளுநரை சந்தித்ததாக ஆதித்யா கூறினார்.
மேலும், அவர் கூறும்போது, ஆட்சி அமைப்பது குறித்து தான் எதுவும் பேசவில்லை. அது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரே கூறுவார். அவரின் வார்த்தையே இறுதியானது என்று அவர் கூறினார்.
நாங்கள் தற்போது ஆளநரை சந்தித்தது, சமீபத்தில் அடித்த புயலால் விவாசியகள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம். அதற்கு அவர் இவ்விவகாரத்தில் மத்திய அரசு நிச்சயம் உதவும் என்று உறுதியளித்துள்ளார்.
50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவ சேனை முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனை முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் 2.5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும். சிவசேனா சார்பிலும் முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கூறிவருகிறது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. இந்த இரு கட்சிகளும் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.