பாஜகவுடன் 50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. (File)
New Delhi/ Mumbai: மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில், சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினால் மட்டுமே கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இதன் மூலம் கடந்த சில வாரங்களாக நீடித்து அரசியல் பரபரப்பு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, சிவசேனாவின் பக்கமே உண்மை உள்ளது. இதுபோன்ற தவறான சூழலில், டெல்லி அரசுடன் ஏன் இருக்க வேண்டும்? அதனால் தான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அமைக்க முன்வரபோவதில்லை என்று பாஜக அறிவித்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இரண்டாவது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில், சிவசேனா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். எனினும், சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தேவைப்படுகிறது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை நேரில் சந்திப்பார் என்று தெரிகிறது. முதல்வர் பதவி சிவசேனாவுக்கும், துணைமுதல்வர் பதிவு தேசியவாத காங்கிரஸூக்கும் என்ற அடிப்படையில், கூட்டணி ஒப்பந்தம் இருக்கும் என்ற கூறப்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறினால் மட்டுமே கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து, சிவசேனா தங்களது நிபந்தனையை நிறைவேற்றியதால், தேசியவாத காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களை இன்று ஆலோசனை மேற்கொள்ள அழைத்துள்ளது.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறும்போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆதரவு வேண்டுமெனில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்க வேண்டும், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
சிவசேனாவின் அதிகார்ப்பூர்வ நாளேடான சாம்னாவில், கடந்த வாரம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 44 எம்எல்ஏக்கள் மற்றும் சில சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ஆதரவுடன் சிவசேனாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், சிவசேனா அதன் முதல்வரை முன்நிறுத்த முடியும் என்று தெரிவித்திருந்தது.
எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு இன்று கூடி சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைமை, பாஜக - சிவசேனா கூட்டணிக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. சிவசேனா மக்களின் ஆணையை அவமதிக்க விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைக்கட்டும், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று நேற்றைய தினம் கூறியிருந்தனர்.
மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. பெரும்பான்மைக்கு 145 இடம் தேவையென்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்தது.
எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாகவே அமித்ஷாவுடன் இந்த கூட்டணி ஒப்பந்தங்கள் நடந்து முடிந்ததாக சிவசேனா கூறியது. ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என ஆரம்பம் முதலே பாஜக உறுதியாக கூறியது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)