This Article is From Nov 25, 2019

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய சிவசேனா, காங்.,- தேசியவாத காங்., கூட்டணி!

Maharashtra Government Formation: 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்கள் வசம் உள்ளதாக 3 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய சிவசேனா, காங்.,- தேசியவாத காங்., கூட்டணி!

Maharashtra Government:பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

Mumbai:

162 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அவர்களின் கையெழுத்துடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ளன. 

288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்கள் வசம் உள்ளதாக 3 கட்சிகளும் தெரிவித்துள்ளன. அதன்படி, சிவசேனா வசம், சுயேட்சைகளின் ஆதரவுடன் 63 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், காங்கிரஸ் வசம் 44 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக அஜித்பவார் கூறிய நிலையில், அக்கட்சியில் மொத்தமுள்ள 54 எம்எல்ஏக்களில் 51 எம்எல்ஏக்களின் ஆதரவு கையெழுத்தை தேசியவாத காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது. 

கடந்த சனிக்கிழையன்று மகாராஷ்டிரா அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

இதையடுத்து, மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதுதொடர்பாக அஜித்பவார் கடந்த 22ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததன் பேரில் பாஜக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தது. இதைத்தொடர்ந்தே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த கடிதத்தில், முன்னதாக எங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்தது. நிலையான ஆட்சி அமைய நாங்கள் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். ஆளுநர் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை அறிந்த பின்னரே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்று கூறினார். 

இதனிடையே, அஜித்பவாரின் மாமா சரத்பவார் கூறும்போது, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 53 எம்எல்ஏக்கள் எங்களுடனே உள்ளனர். சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை தந்திரமாக ஏமாற்றி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அஜித்பவார் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

இதனிடையே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இதையடுத்து, எப்போது வேண்டுமானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற நிலையில், தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
 

.