This Article is From Oct 18, 2018

அயோத்தி விவகாரத்தை மீண்டும் கிளப்பும் சிவசேனா – மோடிக்கு சரமாரியாக கேள்வி

கடந்த சில மாதங்களாக மவுனம் காத்து வந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரம் விஜய தசமியான இன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அயோத்தி விவகாரத்தை மீண்டும் கிளப்பும் சிவசேனா – மோடிக்கு சரமாரியாக கேள்வி

விஜய தசமி உரையாற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே

New Delhi:

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தற்போது நெருக்கடியை அளித்து வருகிறது. விஜய தசமியான இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அயோத்தி விவகாரம் குறித்து பேசினார்.

அவர் தனது உரையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், இது அவசர தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. தியாகி அளித்துள்ள பதிலில், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இந்த விவகாரத்தை சிக்கலாக்கும் செயல்களை செய்யக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சி கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனது விஜய தசமி உரையில் கூறியிருப்பதாவது-

புவியியல் பாடப் புத்தகத்தில் இல்லாத நாடுகளுக்கும் பிரதமரே நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் அயோத்திக்கு செல்ல மறுப்பது ஏன்?. நான் அடுத்த மாதம் 25-ம் தேதி அயோத்திக்கு செல்கிறேன். அங்கு ராமர் கோயிலை கட்டுவதற்கு ஏன் தாமதம் ஏற்படுகிறது. நிச்சயமாக அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம்.

பணவீக்கம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். அப்போது எதுதான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது? மத்திய அரசால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை.

மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்திருக்கும் காரியங்களால் நாடு இப்போது எரிமலை போல் உள்ளது. மக்கள் குமுறி எழத் தொடங்கினால் பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வராது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

.