Mumbai: பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மக்களின் 'முதுகில் குத்திவிட்டார்' சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தன.
அதன்படி, இன்று காலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்துக்கு மேல் திருப்பமாக, பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி அமைத்தது தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல என்றும் அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாக இருக்கலாம் என்றும் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவே முதல்வராக 5 வருடமும் இருப்பார் என்று நேற்றைய தினம் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. இதற்காக மகாராஷ்டிராவில் இன்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மகாராஷ்டிராவிற்கு நிலையான ஆட்சி தேவை, சிவசேனா மக்களின் ஆணையி பின்பற்றவில்லை.
ஆட்சி அமைக்க ஆளுநரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது என்று கூறிய அவர், எங்களை ஆதரித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நன்றிறைய தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.