This Article is From Nov 06, 2019

பாஜகவுக்கு கல்தா கொடுத்த சிவசேனா! - சரத்பவாரை சந்தித்த சஞ்சய் ராவத்!!

Maharashtra Election Results: சிவசேனாவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 24 மணி நேரமும் தயாராக இருப்பதாகவும் ஆனால், தேவேந்திர ஃபட்நாவிஸே முதல்வராக நீடிப்பார். எனவும் பாஜக நேற்றைய தினம் கூறியிருந்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு 50:50 அதிகாரப்பகிர்வு கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருந்து வருகிறது.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 2 நாட்களே கெடு உள்ள நிலையில், சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி என்பதை தவிர்த்து கூட்டணி குறித்து பாஜகவுடன் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என சிவசேனா தனது கோரிக்கையில் முழு உறுதியுடன் உள்ளது.

இந்நிலையில், தற்போது புதிதாக ஒப்பந்தம் செய்வதற்கு எதுவும் இல்லை என சிவசேனா செய்திதொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்றைய தினம், சிவசேனாவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 24 மணி நேரமும் தயாராக இருப்பதாகவும் ஆனால், தேவேந்திர ஃபட்நாவிஸே முதல்வராக நீடிப்பார். எனவும் பாஜக கூறியிருந்தது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் கூறும்போது, 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்தே பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்படி இருக்கும் போது தற்போது புதிதாக ஒப்பந்தம் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் என்ன என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமைந்தால் நிச்சயம் மக்களுக்கு அது நன்றாக இருக்காது. அதற்கு நாங்கள் பொறுப்பும் ஆக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்றைய தினம் சிவசேனாவின் அதிகார்ப்பூர்வ நாளேடான சாம்னாவில், மகராஷ்டிராவின் அரசியல் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் எடுக்கும் முடிவிலே உள்ளது என்று தெரிவித்திருந்தது. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் சிவசேனா ஆர்எஸ்எஸ் தலையீட்டை எதிர்நோக்கியது. இதுதொடர்பான சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையிலும், பாஜக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மறுத்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. இதனால், ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான இறுதி கெடு நெருங்கும் நிலையில், இன்று முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க நாக்பூர் சென்றுள்ளார். 

மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 105 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, தங்களிடம் 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகிறது. 56 தொகுதிகளை கைப்பற்றிய சிவசேனா 63 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 102 இடங்கள் உள்ளன. 

தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் சிவசேனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

.