Maharashtra Cabinet Expansion: அமைச்சரவை விரிவாக்கம் மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
Mumbai: மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மகாராஷ்டிராவில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், பால் தாக்கரேவின் பேரனுமாகிய ஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 1 மணிக்கு மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றது. உத்தவ் அமைச்சரவையில் ஏற்கனவே 6 அமைச்சர்கள் உள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 2-வது முறையாக அஜித் பவார் பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார்.
ஏற்கனவே அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அப்போது, முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் பொறுப்பில் இருந்தார்.
இதன்பின்னர் அங்கு ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களால், பட்னாவிசும், அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார். மாநிலத்தில் சுமார் 80 மணி நேரமாக நீடித்திருந்த பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த செய்தி குறித்த 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...
1. கேபினட் - இணை அமைச்சர்கள் என மொத்தம் 36 அமைச்சகர்கள் இன்று பொறுப்பேற்றனர். இவர்களில் 10 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானுக்கு பொதுப் பணித்துறை ஒதுக்கப்படலாம்.
2. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான், கே.சி. பத்வி, விஜய் வடேட்டிவார், அமித் தேஷ் முக், சுனில் காதல், யஷோமதி தாகூர், வர்ஷா கெய்க்வாட், அஸ்லம் ஷேக், சதேஜ் பாட்டீல், விஷ்வஜீத் காதீர் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
3. கடந்த நவம்பர் 28-ம்தேதி காங்கிரசை சேர்ந்த பாலாசாஹிப் தோரட், நிதின் ராவத் ஆகியோரும், சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சாகன் பூஜ்பால், ஜெயந்த் பாட்டீல் ஆகியோரும் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
4. மகாராஷ்டிர அரசில் அதிகபட்சம் 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம். இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 15 சதவீதம் ஆகும்.
5. நவம்பர் மாதம் சரத் பவாரின் என்.சி.பி., காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க மும்முரம் காட்டின. அப்போது, அஜித் பவார் திடீரென பாஜகவுடன் சேர்ந்து கொண்டு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தார். ஆனால் அடுத்து வந்த நாட்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் சரத் பவாருடன் இருந்ததால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
6. ஆனால் ஆட்சியைமப்பது குறித்து காங்கிரஸ் தாமதம் காட்டியதால்தான் இந்த சிக்கல்கள் நேர்ந்ததாக சரத் பவார் குற்றம் சாட்டியிருந்தார். இதுதான் அஜித் பவார், பாஜக பக்கம் செல்ல காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
7. கடந்த நவம்பர் 28-ம்தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றபோது அந்த நிகழ்வில் அஜித் பவார் கலந்து கொண்டார். ஆனால் அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இதனை அவரது தனிப்பட்ட முடிவு என்று சரத் பவார் தெரிவித்தார்.
8. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது 2 முறை துணை முதல்வர் பொறுப்பில் அஜித் பவார் இருந்திருக்கிறார்.
9. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம்தேதி சகோலி செக்மன்ட் தொகுதி எம்.எல்.ஏ. நானா படோல் சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
10. சிவசேனா - காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகா விகாஸ் அகாதி என அழைக்கப்படுகிறது. கொள்கை ரீதியில் வேறுபட்டாலும், குறைந்தபட்ச அடிப்படை செயல் திட்டத்தின்கீழ் இந்த கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.